ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2022-தனுசு ( மூலம்,பூராடம்,உத்திராடம் 1-ஆம்பாதம்)
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே , சுயநலம் பாராமல் எதையும் துணிந்து செய்பவராகவும் கள்ளம் கபடமின்றி உண்மையாகப் பழகுபவராகவும் விளங்கும் உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
2022 – ஆம் ஆண்டில் உங்கள் ராசியாதிபதி குரு 13-4-2022 வரை முயற்சி ஸ்தானமான 3 – ல் சஞ்சரிப்பதாலும் , அதன்பின்பு சுக ஸ்தானமான 4 – ல் குரு சஞ்சரிக்க இருப்பதாலும் நீங்கள் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே அடையவேண்டிய நற்பலன்களை அடையமுடியும்.
உங்கள் ராசிக்கு சர்ப்ப கிரகமான ராகு 6 – ல் 12-4-2022 வரையும் , அதன்பின்பு கேது 11 – ல் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொள்ளும் திறன். எதிர்பாராத உதவிகள் கிடைத்து அதன்மூலம் ஏற்றங்களை அடையும் வாய்ப்பு உண்டாகும்.பண வரவுகள் சற்ற சாதகமாக இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைப் பது , அதிக முதலீடு கொண்ட செயல்களைத் தவிர்ப்பது நல்லது.
சுபகாரிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்பட்டாலும் சிறு தடைக்கு பின்பு திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும்.கணவன் மனைவியிடையே இருந்த கடந்தகால கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். ஆன்மிக தெய்வீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு , தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.
தொழில் , வியாபாரம் செய்பவர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் மந்தநிலை நிலவினாலும் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு சிறப்பான முன்னேற்றங்களைப் பெறுவீர்கள். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்துகொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ளமுடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது சிந்தித்து செயல்படுவது நல்லது.
பெரிய மனிதர்களின் நட்பு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும் உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதிகாரிகள் ஆதரவாக இருப்பதால் மனநிம்மதியுடன் பணியாற்ற முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் சிறு தடைக்குப்பின் கிடைக்கும்.
ஒரு ராசியில் நீண்ட நாட்கள் தங்கும் கிரகமான சனி இவ்வாண்டு உங்கள் ராசிக்கு 2 – ல் சஞ்சரிப்பதால் , உங்களுக்கு ஏழரைச்சனியில் பாதசனி நடைபெறுவதால் எந்தவொரு விஷயத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.
உடல் ஆரோக்கியத்தில் அதிககவனம் செலுத்த வேண்டியிருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. தேவையற்ற வகையில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டு சிலருக்கு கடன்கள் ஏற்படலாம்.எதிலும் சிந்தித்து செயல்படுவது ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டு சிக்கனமாக இருப்பது நல்லது.
திருக்கணிதப்படி உங்கள் ராசிக்கு 2 – ல் சஞ்சரிக்கும் சனி பகவான் அதிசாரமாக 29-4-2022 முதல் 12-7-2022 வரை முயற்சி ஸ்தானமான 3 – ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்கள் வாழ்வில் மிகபெரிய முன்னேற்றம் ஏற்படும். ஏழரைச்சனியின் தாக்கம் முற்றிலும் குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை அடையும் யோகம் உண்டாகும்.