Thursday, December 7, 2023
Homeஅம்மன் ஆலயங்கள்அம்மை நோய் போக்கும்-ஆயிமகமாயி சமயபுரத்தாள்

அம்மை நோய் போக்கும்-ஆயிமகமாயி சமயபுரத்தாள்

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

அம்மை நோய் போக்கும்-ஆயிமகமாயி சமயபுரத்தாள்

திருச்சியின் ஒரு பகுதியான எடைமலைப்பட்டி புதூருக்கும் கிராப்பட்டிக்கும் இடையே உள்ளது சிம்கோ காலனி.மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 2.கிலோ மீட்டர் நகர பேருந்து, ஆட்டோ வசதி உள்ளது.

திருச்சியின் மையப் பகுதியில் உள்ளது சிம்கோ காலனி. இங்கு ஆளுயர புற்று ஒன்று வளர்ந்திருந்தது. மக்கள் அந்தப் புற்றுக்கு முன் பால் வைத்து ,மஞ்சள் நீர் தெளித்து, குங்குமம் இட்டு வணங்கி வந்தனர்.

வெள்ளி கிழமைகளில் பெண்கள் கூட்டம் அங்கே அலைமோதும். ஊர்மக்கள் ஒன்றுகூடி அந்த இடத்தில் ஒரு ஆலயம் அமைக்க எண்ணினர். ஆனால் அடித்தளம் மட்டுமே போட்டபின் ஆலயம் கட்ட இயலாத நிலை ஏற்பட்டது. ஒரு ஆண்டல்ல இரு ஆண்டல்ல ஏழு ஆண்டுகள் இந்த நிலை நீடித்தது.

இந்த காலனியில் சமயபுரம் மாரியம்மனின் தீவிர பக்தர் ஒருவர் இருந்தார். ஒரு சமயம் அவர் மகனுக்கு பெரியம்மை நோய் கண்டது.நோயின் கடுமை அதிகமாக இருக்கவே, அந்த பக்தர் மன வேதனை பட்டார். சமயபுரம் மாரியம்மனை வேண்டி பிரார்த்தனை செய்தார். கண்ணீர் விட்டார், கலங்கிய நிலையில் உறங்கிய அவருடைய கனவில் அன்னை தோன்றினாள்.

ஆயிமகமாயி சமயபுரத்தாள்

“அடித்தளம் மட்டுமே போடப்பட்டு இருக்கும் ஆலயத்தை கட்டி முடிப்பாயாக”! என கட்டளையிட்டாள். கனவு கலைந்தது. மீண்ட பக்தரின் உடம்பு சிலிர்த்தது. அன்னையின் குரலைக் கேட்டு அவர் மெய்மறந்து நின்றார். மனமெல்லாம் பட்டாம் பூச்சி பறந்தது. எவருக்கும் கிடைக்காத பாக்கியம் தனக்குக் கிடைத்ததை எண்ணி பூரித்தார்.

மறுநாளே ஆலயம் கட்ட வேண்டிய ஆயத்தப் பணிகளை தொடங்கினார். என்ன ஆச்சரியம்! அவர் மகன் வியக்கத்தக்க வகையில் விரைந்து குணமானான்.

தன் மனதில் குடி கொண்டிருக்கும் அந்த சமயபுரத்து அம்மனையே தான் அமைத்த ஆலயத்தின் மூலவர் வடிவமைத்தார். ஆலயத்தை அழகுற கட்டி முடித்தார். மூல நாயகிக்கும் அதே பெயரை சூட்டினார். அந்த ஆலயமே சிம்கோ காலனியில் உள்ள ஆயி மகமாயி சமயபுரத்தாள் ஆலயம்.

பங்குனி மாதம் 3வது ஞாயிறன்று அன்னைக்கு பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெறும். நூற்றுக்கணக்கான தட்டுகள் நிறைய பூக்களை கொண்டு வரும் பக்தர்கள் அன்னையை அந்த பூக்களைக் கொட்டி ஆராதிக்கும் காட்சி அற்புதம்.

சித்திரை மாத கடைசி ஞாயிறு, திங்கள், செவ்வாய் என மூன்று தினங்கள் இங்கு சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. அது சமயம் அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

தை மாதம் பொங்கலின் போது ஆலயத்தின் எதிரே ஊர் மக்கள் திறந்த வெளியில் பொங்கல் வைத்து கொண்டாடுவது கண்கொள்ளாக்காட்சி.

இந்த ஆலயத்தின் இடதுபுறம் சித்தர் மடம் ஒன்று உள்ளது. இந்த மடத்தில் 18 சித்தர்களின் உருவம் கற்சிலை வடிவில் வடிவமைக்கப்பட்டு பிரம்மிக்க வைக்கிறது. மண்டபத்தின் நடுவே சிவபெருமான் சிலை ஒன்று உள்ளது. இது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் இருந்து ஒரே கல்லில் 5அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட பளிங்கு தியான சிலை. இந்த தியான மடத்தில் மாலை நேரத்தில் தியானமும், யோகாவும் கற்றுத் தரப்படுவது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயமாகும்.

குழந்தை பேறு வேண்டுவோரும்,திருமணம் நடக்கவேண்டும் கன்னியரும், நோயால் அவதிப்படுவோரும், இந்த ஆலயம் வந்து ஏழு நாட்கள் அன்னையை அர்ச்சனை செய்து வழிபட்டால் தங்களது பிரார்த்தனை நிச்சயம் பலிக்கும் என நம்புகின்றனர்.

பக்தர்களை அரவணைக்கும் அன்னை ஆயி மகமாயி சமயபுரத்தாளை நீங்களும் ஒருமுறை சென்று குடும்பத்துடன் தரிசித்து வாருங்கள்…

ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular