தை மாத ராசி பலன்கள்
நாட்டில் தொழில் வளர்ச்சி அதிகமாகும். இம்மாதம் ஆகாய விமானம் வானத்தில் பழுதாகி வெடிக்கும். பங்கு வர்த்தகத் தொழில் ஸ்திரமடையும். ஆண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகமாகும். டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஸ்திரமாக இருக்கும். ஆன்மீக காரியங்கள், கும்பாபிஷேகங்கள் அதிகமாக நடக்கும்.
புஷ்பவிலை ஏற்றமடையும். நாட்டில் சுப காரியங்கள் அதிகமாக நடக்கும். அத்தியாவசிய பொருள்கள் விலை குறையும். மக்கள் சந்தோஷமாக இருப்பார்கள். காய்கறி விலை மட்டும் ஏறும். தங்கம்,வெள்ளி விலைகள் கட்டுக்குள் இருக்கும். ஆடம்பர பொருட்கள் விற்பனை அதிகமாகும்.
தை மாதத்தில் வரும் முக்கியமான நாட்கள்
- தை -1 உத்தராயண புண்ணிய காலம் பொங்கல் வைக்க நேரம் காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை
- தை மாதம் 8-ம் தேதி சியாமளா நவராத்திரி பூஜை அறை பூஜை ஆரம்பம்.அன்றுமுதல் 9 நாட்களுக்கு வீட்டில் தேவிபாகவதம் படிக்க உத்தமம்.
- தை மாதம் 11-ம் தேதி மற்றும் 12-ம் தேதி வீட்டில் லட்சுமி பூஜை செய்ய லட்சுமி கடாட்சம் பெருகும்.
- தை மாதம் 14-ம் தேதி ரதசப்தமி அன்று சூரிய பூஜை செய்யவும்.
- தை மாதம் 22-ம் தேதி அன்று தைப்பூசம் முருகனை வழிபடவும். வடலூர் ஜோதி தரிசனம் அன்னதானம் செய்ய உத்தமம்
தை மாத ராசி பலன்

மேஷம்
(அசுவினி,பரணி,கிருத்திகை 1-ம் பாதம்)
பங்குனி 7-ம் தேதி 21.3.2023 அன்று மேஷ ராசியில் பிரவேசித்த ராகு அந்த ராசியின் பாதையில் பெரும்பான்மையான தூரத்தை கடந்து விட்டதால் அதன் சாய்மான கோணத்திலும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது. ராகுவினால் ஏற்பட்ட தோஷமும் குறைந்துள்ளது. உடல் உபாதைகள் நீங்கும். குடும்பத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வந்த வீண் செலவுகள் இனி படிப்படியாக குறையும்.
குரு பகவான் விரையத்தில் நீடிப்பதால் திருமணம் முயற்சிகளில் வரன் அமைவது தாமதமாகும். நெருங்கிய உறவினர்களிடையே சிறு சிறு கருத்து வேற்றுமைகள் ஏற்படக்கூடும். இருப்பினும் வியாபாரத்தில் பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. சூரியனின் நிலையினால் சரும சம்பந்தமாக ஏற்பட்டிருந்த பிரச்சனைகள் தீர ஆரம்பிக்கும்.
மிக முக்கியமான குடும்ப விஷயம் சம்பந்தமாக வெளியூர் பயணங்களை ஏற்க நேரிடும். முயற்சியில் வெற்றி கிட்டும். உங்கள் சிந்தனை திறனையும் விடாமுயற்சியையும் பயன்படுத்துவதற்கு ஏற்ற மாதம் இந்த மாதம்.

ரிஷபம்
(கிருத்திகை 2,3,4ம் பாதம்,ரோகிணி,மிருகசீரிடம்1,2-ம் பாதம் )
ராசிக்கு அதிபதியான சுக்கிரன் மட்டுமின்றி குரு, புதன், கேது ஆகியோரும் உங்களுக்கு அனுகூலமாக நிலை கொண்டுள்ளனர். தை மாதம் 21-ம் தேதிக்கு பிறகு புதன் மட்டும் அனுகூலமற்ற நிலைக்கு மாறுகிறார். ராகு லாப ஸ்தானத்தை நோக்கி தனது பின்னோக்கி செல்லும் பாதையில் மேஷத்தின் பாதி தூரத்தை கடந்து விட்டதால் அவரால் ஏற்பட்டு வந்த உடல் உபாதைகள் குறையும்.
ஜென்ம ராசியில் செவ்வாய் அமர்ந்திருப்பதால் அவ்வப்போது உஷ்ணம் சம்பந்தமான பாதிப்பும், சோர்வும் ஏற்படும். குருவின் நிலையினால் குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிலவும்.
குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் மனதிற்கு நிம்மதியை அளிக்கும். சனி பகவானின் நிலையினால் முயற்சிகளில் குழப்பங்கள் ஏற்படக்கூடும். எதிர்பாராத வெளியூர் பயணம் ஒன்றை மூன்றாவது வாரத்தில் இருக்க நேரிடும். விவாக முயற்சிகளில் சிறு தடங்கல் ஏற்பட்டு அதன் பிறகு வரன் அமையும்.

மிதுனம்
(மிருகசீரிடம் 3ம் பாதம்,திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதம்)
சுக்கிரன், கேது, ராகு ஆகியோரால் நன்மைகளை எதிர்பார்க்கலாம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது அமர்ந்திருப்பதால் மனம் ஆன்மீகத்தில் தீவிரமாக ஈடுபடும். நல்லோர் சேர்க்கை, மகான்களின் தரிசனம், தீர்த்த தல யாத்திரை சித்திக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். செலவுகளும் அதற்கு ஏற்பவே இருப்பதால் சேமிப்பிற்கு சாத்தியக் கூறு இல்லை. எந்த நிலையிலும் பிறருடைய உதவியை நாட வேண்டிய அவசியமிராது.
திருமண வயதில் பெண் அல்லது பிள்ளைகள் இருப்பின் மூன்றாவது வாரத்தில் இருந்து விவாக முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்ல வரன் அமைவதற்கு கிரக நிலைகள் அனுகூலமாக உள்ளன. குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். அதிக அலைச்சலும், அடிக்கடி வெளியூர் பயணங்களும் அசதியை ஏற்படுத்தக்கூடும்.
பழைய கடன்கள் கவலையளிக்கும். அடிக்கடி சிறு உடல் உபாதைகள் ஏற்படுவதால் மருத்துவ செலவுகளும் சற்று அதிகமாகவே இருக்கும். வெளியூர் பயணங்களின் போது பணம். பொருட்கள் ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது அவசியம்.

கடகம்
(புனர்பூசம் 4ம் பாதம்,பூசம்,ஆயில்யம்)
குரு மற்றும் செவ்வாய் ஆகிய இரு கிரகங்கள் உங்களுக்கு அனுகூலமாக நிலை கொண்டுள்ளனர். வருமானம் தேவையான அளவிற்கு இருப்பதால் பணப்பிரச்சினை ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. குடும்ப சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும். உறவினர்களிடையே ஒற்றுமை நிலவும். ஆரோக்கியம் நல்லபடியாக இருக்கும்.
ராசிக்கு குருபகவானின் சுப பார்வை கிடைப்பதால் முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கும். விவாக முயற்சிகளில் வெற்றி கிட்டும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான போக்கு தென்படும். குழந்தைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். காரணம் பூர்வ புண்ணிய, புத்திர ஸ்தானத்திற்கு குருவின் பார்வை ஏற்படுவதால் தான். பூர்வீக சொத்து ஒன்றை விற்க நேரிடும் என்பதையும் கிரக நிலைகள் சுட்டிக் காட்டுகின்றன.

சிம்மம்
(மகம்,பூரம்,உத்திரம் 1ம் பாதம் )
உங்கள் ராசிநாதனாகிய சூரியன், ஆயுள் ஜீவனகாரனாகிய சனி, மோட்சாரனாகிய கேது ஆகிய மூவரும் அனுகூலமாக நிலை கொண்டுள்ளனர். அஷ்டம ராசியில் சஞ்சரிக்கும் குருவினால் எவ்வித நன்மையும் எதிர்பார்க்க இயலாது. ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் வேண்டும்.
குரு மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களுமே அனுகூலமற்ற நிலையில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் பரஸ்பர அன்னோனியமும் ஒற்றுமையும் குறையும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகும். ஜனன கால தசா புத்திகள் அனுகூலமற்று இருப்பின் தவறான வரனை நிச்சயத்து விட வாய்ப்பு உள்ளது.
சிறு விஷயங்களுக்கு கூட அதிக அலைச்சலும் உழைப்பும் தேவைப்படும். மனதில் அமைதி குறையும். எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். சம சப்தம ஸ்தானத்தின் நுழைவாயிலில் சனி பகவான் நிற்பதால், மனைவியின் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம். மாதத்தின் கடைசி வாரத்தில் பணம் நெருக்கடிகள் ஏற்படக்கூடும்.

கன்னி
(உத்திரம் 2,3,4-ம் பாதம் ,அஸ்தம் ,சித்திரை 1,2ம் பாதம் )
குரு பகவான் நல்ல சுப பலம் பெற்ற திகழ்வதால் குடும்பத்தில் சுபிட்சம் பெருகும். நிச்சயதார்த்தம், விவாகம், சீமந்தம், குழந்தைகளுக்கு தொட்டில் இடுதல் போன்ற சுப நிகழ்ச்சிகள் நிகழும். அதன் காரணமாக செலவுகள் அதிகமானாலும் மனதிற்கு நிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
அஷ்டமஸ்தானத்தில் ராகு நீடிப்பதால் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மேஷ ராசியின் பாதி தூரத்தை அவர் கடந்து விட்டதால் அவரால் ஏற்பட்ட தோஷம் பெருமளவில் குறைகிறது. பல பெண்மணிகளுக்கு கருத்தரிக்கும் யோகம் இருப்பதையும் கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. சிலருக்கு வசதியான வீட்டிற்கு மாறுதலும், சொந்த வீடு அமையும் யோகமும் உள்ளன.
இரண்டாம் இடத்தில் நிலை கொண்டுள்ள கேதுவின் சக்தியினால் பாடல் பெற்ற திருத்தல தரிசனமும் சித்திக்கும். மகான்களின் பிருந்தாவனம் மற்றும் சித்தர்களின் ஜீவ சமாதிகள் தரிசனம் கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. திருமணம் முயற்சிகளில் எளிதில் வெற்றி கிட்டும். பழைய கடன்கள் இருப்பின் அவற்றை அடைத்து நிம்மதி பெற சாதகமான மாதம் இது.

துலாம்
(சித்திரை 3,4ம் பாதம்,சுவாதி,விசாகம் 1,2,3-ம் பாதம் )
புதன், சுக்கிரன் ஆகிய இருவரும் உங்களுக்கு அனுகூலமாக சஞ்சரிக்கின்றனர். ராசிக்கு தனம், குடும்பம், தொழில், விரயம் ஆகிய ஸ்தானங்களுக்கு குருவின் சுப பலம் கிடைப்பது மிகவும் விசேஷ பலன்களை அளிக்கக்கூடிய கிரக நிலையாகும். தேவைக்கு ஏற்ற வருமானமும் கிடைக்கும். ஆயினும் சேமிப்பிற்கு வாய்ப்பு இல்லை.
உடல் நலம் திருப்திகரமாக இருக்கும். திருமண முயற்சிகளில் தடங்கல்களும், பண விரயமும் ஏற்பட்டு அதன் பிறகு வரன் அமையும். குடும்பத்தில் பல மாதங்களாக கவலை அளித்து வந்த பிரச்சனை ஒன்று இப்போது நல்லபடியாக தீரும். மனதில் ஏதோ ஒரு கவலை இருந்து கொண்டே இருக்கும். கேதுவின் நிலையினால் ஆன்மீக சிந்தனைகளும், பக்தியுணர்வும் மேலிடும்.

விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம்,அனுஷம்,கேட்டை )
பிரதான கிரகங்கள் அனைத்தும் விருச்சக ராசி அன்பர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்திருப்பதால் சிறந்த யோக பலன்களை அளிக்கக்கூடிய மாதம் இந்த தை! குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நெருங்கிய உறவினர்களிடையே பரஸ்பர அன்பும் ஒற்றுமையும் மேலிடும். மகன் அல்லது மகள்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைப்பதால் உற்சாகம் மேலிடும்.
திருமண முயற்சிகளுக்கு ஏற்ற மாதம் இது. சிறு முயற்சியிலேயே நல்ல வரன் அமையும். குரு, சுக்கிரன் மற்றும் செவ்வாயின் ராசியில் அமர்ந்துள்ள ராகு ஆகியோரின் சுப பலத்தினால் பலருக்கு சொந்த வீடு அல்லது நிலம் அமையும் யோகமும் உள்ளது. ஆரோக்கியத்தில் நல்ல அபிவிருத்தியை காண முடியும்.
நிரந்தர நோய்களாலும் வயோதிகம் காரணமாகவும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் விருச்சக ராசியினருக்கு கூட வியக்கத்தக்க குணம் ஏற்படும்.குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளினால் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பினை எதிர்பார்க்கலாம். முயற்சிகள் அனைத்தும் வெற்றி கிட்டும். விரயத்தில் கேது இருப்பதால் மனம் ஆன்மீகத்தில் தீவிரமாக ஈடுபடும்.

தனுசு
(மூலம் ,பூராடம்,உத்திராடம் 1ம் பாதம் )
ஏழரை சனி காலத்தில் இருந்து நீங்கள் விடுபட உள்ளீர்கள். சுக்கிரன் செவ்வாய் மற்றும் கேது ஆகிய மூவரும் அனுகூல நிலைகளில் சஞ்சரிக்கின்றனர். உங்கள் ராசிநாதனாகிய குரு அனுகூலமாக இல்லை. வரவுகேற்ற செலவுகளும் இருக்கும். மாத கடைசியில் பண பற்றாக்குறை ஏற்படுவதற்கும் சாத்தியகூறு உள்ளது. சுக்கிரனின் நிலையினால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். விவாக முயற்சிகளில் ஏமாற்றம் ஏற்படும்.
அவ்வப்போது சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு எளிய சிகிச்சையினால் குணமாகும். மூன்றாம் வாரத்தில் ஒரு குடும்ப நிகழ்ச்சி காரணமாக வெளியூர் பயணங்களை ஏற்க நேரிடும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது.

மகரம்
(உத்திராடம் 2,3,4ம் பாதம்,திருவோணம்,அவிட்டம்1,2ம் பாதம்)
ஜென்ம சனியில் இருந்து நீங்கள் விடுபடுவதற்கு மேலும் 2 1/2 மாதங்கள் ஆகும். குடும்ப பிரச்சனைகள் நீடிக்கின்றன. பங்குனி மாதம் 15ஆம் தேதி ஜென்ம சனியிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். அதுவரை வருமானத்தை விட செலவுகளே அதிகமாக இருக்கும். எந்த செலவையும் தவிர்க்க இயலாது. போராட்டமே வாழ்க்கை என்ற நிலையில் இருந்து நீங்கள் பங்குனி மாதம் மாற்றம் காண்பீர்கள்.
அதுவரை ஆரோக்கியத்திலும் தொடர்ந்து கவனமாக இருந்தால் நல்லது. குரு பகவான் அனுகூலமற்ற நிலையில் இருப்பதால் திருமணம் முயற்சிகளிலும் வரன் அமைவது சற்று கடினமே. குடும்பத்திலும் ஒற்றுமை குறைவினால் மனதில் டென்ஷன் ஏற்படும். முயற்சிகள் அனைத்திலும் ஏமாற்றமே மிஞ்சும்.

கும்பம்
(அவிட்டம் 3,4ம் பாதம்,சதயம்,பூரட்டாதி 1,2,3ம் பாதம்)
ஏழரைச் சனியின் முதல் பாதியில் உள்ள கும்ப ராசியினருக்கு சனிபகவானால் அதிக சிரமங்கள் இராது. ஏனெனில் கும்பம் அவரது ஆட்சி வீடாகும். கோள்சார விதிகளின்படி குரு, சுக்கிரன், ராகு மற்றும் புதன் ஆகியோர் சிறந்த சுப பலம் பெற்று விளங்குகின்றனர். பணவரவு போதுமான அளவிற்கு இருப்பதால் குடும்ப நிர்வாகம் எவ்வித சிரமமும் இன்றி நடைபெறும்.
சூரியனின் சஞ்சார நிலை, விலை உயர்ந்த பொருள்களில் ஒன்று காணாமல் போவதற்கு வாய்ப்பு உள்ளதை எடுத்துக்காட்டுகிறது. திருமணம் முயற்சிகளில் நல்ல வரன் அமைவதால் மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் சுப செலவுகளும் இருக்கும். செலவுகளை சமாளிப்பதற்கு பிரச்சனை ஏதும் இருப்பதற்கு வாய்ப்பில்லை. கும்ப ராசியில் பிறந்துள்ள பெண்மணிகளுக்கு கருத்தரிக்க வாய்ப்பு சிறப்பாக உள்ளது. குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் திருப்திகரமாக இருக்கும்.

மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம் ,உத்திரட்டாதி ,ரேவதி )
உங்கள் ராசிக்கு அதிபதியாக குரு செவ்வாய் மற்றும் கேது ஆகியோரை தவிர மீதம் உள்ள கிரகங்களை வரும் உங்களுக்கு சாதகமான நிலையில் சஞ்சரிக்கின்றனர். இம்மாதத்தில் வருமானம் போதிய அளவிற்கு இருப்பதால் குடும்ப நிர்வாகத்தில் பணப்பிரச்சனை இராது. சுக்கிரனின் நிலையினால் கணவர் மனைவியிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும்.
சனி மற்றும் சூரியன் ஆகியோரின் நிலை உங்கள் ஆரோக்கியம் திருப்திகரமாக இருப்பதற்கு உத்திரவாதம் அளிக்கிறது. திருமணம் முயற்சிகளில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டாலும் நல்ல வரன் அமையும்.முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். மாதத்தின் மூன்றாவது வாரத்தில் எதிர்பாராத பண வரவு ஒன்று கிடைப்பதற்கு சாத்திய கூறு உள்ளது. ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படுவதற்கும் கிரக நிலைகள் அனுகூலமாக உள்ளன.