ஆவணி மாத ராசி பலன்கள் -2023
ஆவணி மாத கிரக நிலைகள்
மேஷம்
( அசுவினி ,பரணி ,கிருத்திகை 1ம் பாதம் வரை )
வருமானம் ஏற்றத் தாழ்வின்றி, ஒரே சீராக நீடிக்கும், இம்மாதம் முழுவதும் ! இருப்பினும், சேமிப்பிற்கு இடமில்லை!! சூரியனின் சஞ்சார நிலையினால், தந்தையின் உடல்நிலை பாதிக்கப்படக்கூடும். ராகுவினால் ஏற்படும் தோஷத்தை, குரு பகவான் போக்கிவிடுவதால், உங்கள் உடல் நலன் திருப்திகரமாகவே இருக்கும். விவாக சம்பந்தமான முயற்சிகளில், இழுபறி நிலை நீடிக்கும்.

நீதிமன்ற வழக்குகள் இருப்பின், எவ்வித முடிவுமில்லாமல் கவலையை அளிக்கும். நெருங்கிய உறவினர்களிடையே தேவையற்ற மறைமுகப் பேச்சுகளும், அதன் விளைவாக, வாக்குவாதங்களும் ஏற்படும். பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படுவதற்குச் சாத்தியக்கூறு உள்ளது.
மூன்றாவது வாரத்தில் எதிர்பாரத செலவு ஒன்று, பணப் பிரச்னையை ஏற்படுத்தக்கூடும். கடன் வாங்காமல், கையில் இருப்பதைக் கொண்டு சமாளிக்க முயற்சிக்கவும்.
பலன் தரும் பரிகாரம்
சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபமும் மற்ற தினங்களில் நெய் தீபம் ஏற்றுதல் சக்தி வாய்ந்த பரிகாரமாகும்.
நன்மை தரும் நாட்கள்
ஆவணி – 3-5,9-13,17-20,25-28
சந்திராஷ்டம நாட்கள்
ஆவணி – 6ம் தேதி இரவு முதல் 8ம் தேதி வரை.
ரிஷபம்
(கிருத்திகை 2ம் பாதம் முதல் ரோகிணி ,மிருகசீரிடம் 2ம் பாதம் வரை)
சுக்கிரன், புதன், கேது ஆகியோரால் நன்மைகள் உண்டாகும் வக்கிரகதியில், பாக்கிய ஸ்தானத்தை நோக்கி நகரும் சனி பகவானாலும் ஓரளவு நன்மைகளை எதிர்பார்க்கலாம். கொடுக்கவும் செய்வார். ஆனால், அதற்கு செலவுகளையும் ஏற்படுத்திவிடுவார். சூரிய புத்திரரான சனி பகவான்!
சிம்மராசி சூரிய பகவானின் ஆட்சி வீடாக இருப்பதால், உடல்நலன் திருப்திகரமாகவே இருக்கும். உறவினர்களிடையே சிறு, சிறு வாக்குவாதங்கள், மறைமுக ஏச்சு – பேச்சுக்கள் இருப்பினும்,குடும்ப ஒற்றுமை பாதிக்கப்படும் அளவிற்கு விபரீத பிரச்னை எதுவும் ஏற்படச் சாத்தியக்கூறு இல்லை.
நீதிமன்ற வழக்குகள் இருப்பின், நீடிக்கும். திருமண முயற்சிகளில் சிறு குழப்பம் ஏற்பட்டு, வரன் நிச்சயமாகும். பிள்ளை ஒருவரின் உத்தியோகம் சம்பந்தமான முயற்சிகளில் நல்ல செய்தி கிட்டும். கிரகநிலைகளின்படி, இந்த மாதத்தின், 2வது அல்லது மூன்றாவது வாரத்தில் இது நிகழும்
நிரந்தர நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் ரிஷப ராசியினருக்கு நல்ல குணம் ஏற்படும் சூரியன் மற்றும் புதனின் சஞ்சார நிலைகளின் காரணமாக!!
பலன் தரும் பரிகாரம்
காலையில் நீராடிய பின்பு தினமும் கந்தர் சஷ்டி கவசம் படித்து வரவும் நல்ல பலன் கிட்டும்.
நன்மை தரும் நாட்கள்
ஆவணி – 3-7,12-15,18-20,24-26,30,31
சந்திராஷ்டம நாட்கள்
ஆவணி – 9ம் தேதி காலை முதல் 11ம் தேதி காலை வரை.
மிதுனம்
(மிருகசீரிடம் 3ம் பாதம் முதல் திருவாதிரை ,புனர்பூசம் 3ம் பாதம் வரை )
சனி பகவான் ஒருவரைத் தவிர, ஏனைய பெரும்பான்மையான, அனைத்துக் கிரகங்களும் உங்களுக்கு சாதகமாகவே சஞ்சரிக்கின்றனர்.
இம்மாதம் முழுவதும்! சூரியன், சுக்கிரன், கேது, குரு மற்றும் ராகு ஆகியோர் உங்களுக்கு ஆதரவாகவே உள்ளனர். மனத்திற்கு மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அளிக்கக்கூடிய மாதமாகும். இந்த ஆவணி மாதம் உங்களுக்கு!!
வருமானம் போதிய அளவில் இருப்பதால், பணப் பிரச்னை இராது. குரு பகவானின் நிலையினால், குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். செலவுகள் கட்டுக்கு அடங்கியே இருக்கும். நிச்சயதார்த்தம், விவாகம், சீமந்தம், போன்ற சுப நிகழ்ச்சிகள் நிகழும், செலவுகள் சற்று அதிகமாகவே இருந்தாலும், மனத்தில் மகிழ்ச்சியே நிலவும். திருமண முயற்சிகள் இருப்பின், எளிதில் கைகூடும்.

பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய துலாம் ராசியில், மோட்ச காரகனான கேது, குரு பார்வை பெற்று இருப்பதால், பிரபல திருத்தல தரிசன பாக்கியமும் கிட்டும். பிள்ளை அல்லது பெண் படிப்பு முடிந்த வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பின் நல்ல வேலைக்கு “ஆர்டர்” வரும்.
பலன் தரும் பரிகாரம்
சனிபகவானுக்கு மட்டும் பரிகாரம் செய்தால் போதும். சிறிது நெய், எள் பருப்பு சேர்த்து கலந்து 5 சாத உருண்டைகள் காகத்திற்கு வைப்பது மிகச் சிறந்த பரிகாரமாகும்.
நன்மை தரும் நாட்கள்
ஆவணி – 2-4,7-9,14-16,21-23,28-30
சந்திராஷ்டம நாட்கள்
ஆவணி – 11ம் தேதி காலை முதல் 13ம் தேதி காலை வரை.
கடகம்
(புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம் ,ஆயில்யம் வரை )
சனி பகவான், வக்கிர கதியில் செல்வதால், அவரால் ஏற்பட்ட “அஷ்டமச் சனி தோஷம்” ஓரளவு குறைகிறது. குறிப்பாக. உங்கள் ஆரோக்கியத்தில் நல்ல மாறுதல்களைக் காணலாம். பொதுவாக, அஷ்டமச் சனிக் காலத்தின்போது கீழே விழுந்து, அதன் காரணமாகக் காலில் அடிபட நேரிடும்…!” எனப் புராதன ஜோதிட நூல்கள் கூறுகின்றன. தற்போது சனி வக்கிரகதியில் திரும்பியுள்ளதால், இந்தத் தோஷம் நீங்கிவிடுகிறது. அதனால், மருத்துவச் செலவுகளும் குறையும்,மனத்தை அரித்து வந்த பல குடும்பச் செலவுகளும் குறையும்.

கணவர் மனைவியரிடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை நீங்கும், மனத்தில் நிம்மதி பிறக்கும். “மகரம்” உங்கள் ராசிக்கு களத்திர (மனைவி) ஸ்தானமாக இருப்பதாலும், வக்கிர கதியின் ஆதிக்கம் மகரத்திற்கு ஏற்படுவதாலும், மனைவிக்கு சிறு,சிறு உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். எளிய சிகிச்சை மூலம் குணமும் ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். விவாத வயதில் பெண் அல்லது பிள்ளைகள் இருந்தால் நல்ல வரன் அமையும்.
பலன் தரும் பரிகாரம்
தினமும் காலையிலும் மாலையிலும் ஓம் நமச்சிவாயா ஓம் நமோ நாராயணா எனும் இரு மகத்தான தாரக மந்திரங்களையும் 108 அல்லது 48 தடவைகள் பக்தி சிறத்தையுடன் சொல்லி வந்தால் போதும்.
நன்மை தரும் நாட்கள்
ஆவணி – 1,2,7-12,16,17,22-24,28-30
சந்திராஷ்டம நாட்கள்
ஆவணி – 13ம் தேதி காலை முதல் 15ம் தேதி பிற்பகல் வரை.
சிம்மம்
(மகம் ,பூரம் ,உத்திரம் முதல் பாதம் வரை )
குரு, சுக்கிரன், கேது, வக்கிர கதியில் உள்ள சனி பகவான் ஆகியோரால் நன்மைகள் ஏற்படும். பண வசதி போதிய அளவிற்கு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சுபநிகழ்ச்சிகளும், அவற்றின் காரணமாக சுபச் செலவுகளும் ஏற்படும். வருமானம் திருப்திகரமாக இருப்பதால், செலவுகளைச் சமாளிப்பதில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு இல்லை.
திருமணம் சம்பந்தமான முயற்சிகளுக்கும் மிகவும் ஏற்ற மாதமாகும். இந்த ஆவணி. தசா, புக்திகள் அனுகூலமாக அமைந்திருப்பின், சொந்த வீடு வாங்கும் யோகமும் உள்ளது. சிலருக்கு, பூர்வீகச் சொத்தில் பாகம் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகள் இருப்பின் வெற்றிகள் கிடைக்கும்.

குரு – சுக்கிரனின் சுப பலத்தினால் குடும்பத்தில் அமைதி நிலவும். சிம்ம ராசியில் ஜெனித்துள்ள அனைத்து சகோதரர்கள், சகோதரிகளுக்கும் இம்மாதம் பல நன்மைகள் ஏற்படும். நீண்ட காலமாக மன நிம்மதியைப் பாதித்து வந்த குடும்பப் பிரச்னை, ஒன்றுமில்லாத படி சுமுகமாக தீர்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் மன நிறைவும் உண்டாகும் பிள்ளை அல்லது பெண்ணிற்கு புதிய வேலை கிடைக்கும்.
பலன் தரும் பரிகாரம்
“பூவரசன்குப்பம்” எனும் அற்புத திருத்தலம் சென்று அங்கு எழுந்தருளியுள்ள பிராண நரசிம்மரை நெய் தீபம் ஏற்றி வைத்து தரிசித்து விட்டு வரவும்.
நன்மை தரும் நாட்கள்
ஆவணி – 1,4-7,11-13,18-20,24-27,31
சந்திராஷ்டம நாட்கள்
ஆவணி – 15ம் தேதி பிற்பகல் முதல் 17ம் தேதி மாலை வரை.
கன்னி
(உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம் ,சித்திரை 2ம் பாதம் வரை )
சுக்கிரன் ஒருவர் மட்டுமே இம்மாதம் முழுவதும் அனுகூலமாக சஞ்சரிக்கின்றார். அஷ்டமராசியில் உள்ள ராகுவினால் ஏற்படும் தோஷம், குருவின் சேர்க்கையினால் குறைகிறது.
ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கூடியவரையில், அலைச்சலையும், தேவையில்லாமல் வெளியில் செல்வதையும் தவிர்ப்பது அவசியம். வயோதிகப் பெரியவர்கள், குளியலறையிலும், மாடிப்படிகளில் ஏறும்போதும் நிதானமாக்காலடிகளை எடுத்து வைப்பது, மிகவும் அவசியம்.

கிரக நிலைகளின்படி, கீழே சறுக்கி விழுந்து, காலில் அடிபடுவதற்கும், மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதற்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன. கூடியவரையில், வெளி இடங்களில் உணவு உண்பதைத் தவிர்ப்பதுநல்லது.
வருமானத்தைவிட செலவுகளே அதிகமாக இருக்கும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளை ஒத்திவைப்பது நல்லது சில தருணங்களில் தவறான வருடம் நிச்சயத்தை விட வாய்ப்புகள் உள்ளன அது சம்பந்தப்பட்ட பின் அல்லது பிள்ளைகளின் எதிர்கால இல்லற வாழ்க்கையை வெகுவாக பாதித்துவிடும் மற்றபடி குடும்ப சூழ்நிலை திருப்திகரமாகவே இருக்கும்.
பலன் தரும் பரிகாரம்
மீனாட்சி பஞ்சரத்தினம் தினமும் சொல்லி வரவும் மகத்தான சக்தி வாய்ந்த துதி இது.
நன்மை தரும் நாட்கள்
ஆவணி – 3-7,14-16,20-22,25-27,31
சந்திராஷ்டம நாட்கள்
ஆவணி – 17ம் தேதி மாலை முதல் 19ம் தேதி இரவு வரை.
துலாம்
(சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி ,விசாகம் 3ம் பாதம் வரை)
குரு பகவான், சுக்கிரன், சூரியன், புதன், செவ்வாய் ஆகியோரால் நன்மைகள் ஏற்படும். சனியினால் நன்மை கிடையாது. பணப் பற்றாக்குறை இராது இம்மாதம் முழுவதும். வருமானம் தேவையான அளவிற்கு இருப்பதால், பணப் பற்றாக்குறை இருப்பதற்கு வாய்ப்பில்லை.
பாக்கியஸ்தானத்தில் குரு நிற்பதால், குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சியை அளிக்கும். கணவர் – மனைவியரிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சனி பகவானால் தோஷம் ஏற்படுவதால், உடல் நலனில் கவனமாக இருங்கள். கூடிய வரையில், வெளியூர்ப்பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

சுப-நிகழ்ச்சிகள் மனத்திற்கு இதமானதாக இருக்கும். ஜென்ம ராசியில் மோட்சகாரகரான கேது சஞ்சரிப்பதால், மகான்கள் தரிசனம், பெரியோர் ஆசி, பிரசித்திப் பெற்ற திருத்தல யாத்திரை ஆகிய பேறுகள் கிட்டும்.
துலாம் ராசியில் பிறந்துள்ள பெண்கள், கருத்தரிக்க ஏற்ற மாதம் இது. குழந்தைகள் நன்றாக படிப்பார்கள். இது பெற்றோர்களையும் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் மன நிறைவையளிக்கும்.
பலன் தரும் பரிகாரம்
தினமும் ஒரு தகசம் மந் நாராயணீயம் படித்து வந்தால் போதும்.
நன்மை தரும் நாட்கள்
ஆவணி – 1,2,7-10,14-17,22-24,28-30
சந்திராஷ்டம நாட்கள்
ஆவணி – 19ம் தேதி இரவு முதல் 21ம் தேதி வரை.
விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம் ,கேட்டை வரை )
சூரியன், ராகு, வக்கிரகதியில் சனி ஆகியோரால் நன்மைகள் ஏற்படும். உங்கள் ராசிநாதனாகிய செவ்வாய் அனுகூலமாக இல்லை. குரு. சுக்கிரன் ஆகியோரும் உதவிகரமாக சஞ்சரிக்கவில்லை.
ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வரவைவிட, செலவுகளே அதிகமாக இருக்கும், மாதத்தின் கடைசி வாரத்தில் பணப் பற்றாக்குறை சற்று கடினமாகவே இருக்கும் என்பதை கிரக நிலைகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
திருமண முயற்சிகளை ஒத்திப்போடுவது நல்லது. குடும்பப் பிரச்னைகள் கவலையளிக்கும். குழந்தைகளின் படிப்பு சம்பந்தமான பிரச்னைகள் மன நிம்மதியைப் பாதிக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து தக்க தருணத்தில் உதவி கிடைக்கச் செய்வார், ராகு பகவான்!! சிறு,சிறு உடல் உபாதைகள் உடலை வருத்தும். கணவர் மனைவியரிடையே பரஸ்பர அன்பும், அந்நியோன்யமும் பாதிக்கப்படும்.

சிறு சிறு விஷயங்களுக்கு கூட அதிக பாடுபட வேண்டி இருக்கும் நெருங்கி உறவினர்களுடன் சற்று அனுசரித்து செல்வது நல்லது செவ்வாயின் ஆதிக்கத்தில் உள்ள விருச்சக ராசியினருக்கு முன்கோபம் பிறவி குணமாக இருக்கும் குறைத்துக் கொள்வது மிகவும் அவசியமே,
பலன் தரும் பரிகாரம்
வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அருகில் உள்ள திருக்கோயில் ஒன்றில் மாலையில் சிறிய அளவில் நெய் தீபம் ஏற்றி வந்தால் போதும்.
நன்மை தரும் நாட்கள்
ஆவணி – 3-7,11-14,19-21,25-27,31
சந்திராஷ்டம நாட்கள்
ஆவணி – 22ம் தேதி முதல் 24ம் தேதி பிற்பகல் வரை.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை)
குரு, சுக்கிரன் ஆதரவாக உள்ளனர், இம்மாதம் முழுவதும் ! ராசிக்கு குரு பகவானின் சுபப் பார்வை கிடைப்பதும் உங்கள் அதிர்ஷ்டமே! சனி பகவானின் வக்கிரகதி, நன்மை செய்ய வாய்ப்பில்லை!
வருமானம் திருப்திகரமாகவே உள்ளது. வீண் செலவுகளைத் தவிர்க்க இயலாது. சனி பகவானின் நிலையினால், உடல் உபாதைகள் ஏற்பட்டு, எளிய சிகிச்சையினால், பூரண குணம் ஏற்படும். திருமண முயற்சிகள் கைகூடும். நீதிமன்ற வழக்குகளில், சாதகமான போக்கு தென்படும்.

வெளிநாட்டில் பணியாற்றிவரும் பிள்ளை அல்லது பெண் ஒருவரின் வருகை, குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தனுசுராசிப் பெண்கள் கருத்தரிக்க ஏற்ற மாதம் இந்த ஆவணி! மகான்கள், குரு மகா சந்நிதானங்கள் ஆகியோரின் ஆசியும், தரிசனமும் கிட்டும்.தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், சொந்த வீடு அமையும் யோகமும் உள்ளதை குரு-சுக்கிரன் நிலையில் உறுதி செய்கின்றன குடும்பத்தில் பரஸ்பர ஒற்றுமை நிலவும்.
பலன் தரும் பரிகாரம்
சனிக்கிழமைகளில் மாலையில் உங்கள் வீட்டில் பூஜை அறையில் 9 நல்ல நிலையில் வரவும் அற்புத பலன் கிட்டும்.
நன்மை தரும் நாட்கள்
ஆவணி -1,4-7,11-13,17-21,27-29
சந்திராஷ்டம நாட்கள்
ஆவணி – 24ம் தேதி பிற்பகல் முதல் 26ம் தேதி பின்னிரவு வரை.
மகரம்
(உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம் ,அவிட்டம் 2ம் பாதம் வரை )
ஜென்ம ராசிக்கு வக்கிர சனி பகவானின் ஆதிக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் சுக்கிரன், புதன் ஆகிய இருவரும் சாதகமாக சஞ்சரிக்கின்றனர். மற்ற கிரகங்களினால் அனுகூலம் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை. இருப்பினும், ராசிக்கு அஷ்டம், தசம, விரய ஸ்தானங்களுக்கு. குரு பகவானின் சுபப் பார்வை கிடைத்திருப்பது, நீரின்றி வாடும் பயிருக்கு மழைபோல், கரை தெரியாத மாலுமிக்கு ஓர் கலங்கரை விளக்கமாக நன்மையளிக்கக்கூடிய கிரக நிலையாகும்.
வருமானம் தேவையான அளவிற்கு இருக்கும். ஆதலால், பணப் பற்றாக்குறை ஏற்படாது. அதே தருணத்தில், சேமிப்பிற்கும் சாத்தியக்கூறு இல்லை. குடும்பத்தில் ஒற்றுமை குறையும். சிறு காரியங்களுக்குக்கூட, அதிக அலைச்சலும், விடாமுயற்சியும் தேவைப்படும். மாதத்தின் கடைசி வாரத்தில் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். தவிர்ப்பது உங்கள் எதிர்காலத்திற்கு நலன் பயக்கும். சில குடும்ப பிரச்சனைகளினால் அடிக்கடி மனதில் டென்ஷன் ஏற்படும் அஷ்டமஸ்தானத்தில் சூரியனும் செவ்வாயும் இணைந்து இருப்பதால் உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் உடலை பாதிக்கும்.

தசா, புத்திகள் அனுகூலமட்டு இருப்பின் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டி இருக்கும். திருமணம் முயற்சிகளும் ஏற்ற மாதம் அல்ல இந்த ஆவணி. வழக்குகள் ஏதும் இருப்பின் வழக்கம்போல் எழுபறி நிலை நீடிக்கும்.
பலன் தரும் பரிகாரம்
தினமும் அளவற்ற மந்திர சக்தி கொண்ட கந்தர் சஷ்டி கவசம் படித்து வரவும்.
நன்மை தரும் நாட்கள்
ஆவணி – 2-6,10-13,17-20,24,25,30,31
சந்திராஷ்டம நாட்கள்
ஆவணி – 1ம் தேதி மீண்டும் 26ம் தேதி பின்னிரவு முதல் 29ம் தேதி பிற்பகல் வரை.
கும்பம்
(அவிட்டம் 3ம் பாதம் முதல் சதயம் ,பூரட்டாதி 3ம் பாதம் வரை)
ஜென்ம ராசி விட்டு சனி வக்கிரத்தில் செல்வது நன்மை செய்யும் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் நிரந்தர நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு கூட வலி தூக்கமின்மை வயிற்றுகோளாறுகள், தலைச் சுற்றல் ஆகிய உடல் உபாதைகளிலிருந்து நல்ல குணம் ஏற்படும்.
வருமானம் ஒரே சீராக நீடிக்கும்.வருமானத்திற்கேற்ற செலவுகளும் இருக்கும். ராசிக்கு, திருதீய ஸ்தானமாகிய மேஷத்தில், குரு சஞ்சரிக்கும்போது, கடலும் வற்றும். ஜீவ நதியும் நீர் இன்றி, வரண்டு போகும் எனப் புராதன ஜோதிட நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது. தற்போது கும்ப ராசிக்கு மூன்றாம் இடத்தில் மேஷத்தில் குரு இருப்பதால், வருமானத்திற்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படும் என்பது ஜோதிடம் கூறும் உண்மையாகும்.

குழந்தைகள் படிப்பில் நல்ல அபிவிருத்தி ஏற்படும். நீதிமன்ற வழக்குகள் இருப்பின், நீடிக்கும். திருமண முயற்சிகளுக்குத் தடங்கல்கள் உண்டாகும். அலுவலகப் பொறுப்புகள் சம்பந்தமாக, வெளியூர் செல்ல நேரிடும்.
பலன் தரும் பரிகாரம்
தினமும் மாலையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம், அபிராமி அந்தாதி ஆகிய சில ஸ்லோகங்களை தவறாது படித்து வாருங்கள் அளவு கடந்த நன்மைகள் ஏற்படுவது தின்னம்.
நன்மை தரும் நாட்கள்
ஆவணி – 1,5-8,14-16,20-22,25-28
சந்திராஷ்டம நாட்கள்
ஆவணி 2லிருந்து, 4 பிற்பகல் வரை. மீண்டும் 29 பிற்பகல் முதல் 31 இரவு வரை.
மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம் முதல் உத்திரட்டாதி ,ரேவதி வரை )
தன ஸ்தானத்தில் குரு அமர்ந்திருப்பதால், பணப் பற்றாக்குறை இராது. வருமானமும் போதிய அளவிற்கு இருக்கும் என கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன.
குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். ஏழரைச் சனியின் தாக்கம், அவரது வக்கிர கதியினால் குறைந்து விடுகிறது. ஆரோக்கியத்தில் நல்ல அபிவிருத்தியைக்காணலாம்.பழைய கடன்கள் இருப்பின், அவை தீரும். சூரியன், செவ்வாய் ஆகியோராலும் நன்மைகள் ஏற்படும். பலருக்குச் சொந்த வீடு அமையும் யோகமும் உள்ளது.

திருமண முயற்சிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற மாதம் இந்த ஆவணி! குடும்பப் பிரச்னைகள் அனைத்தும் தீரும். மனத்தில் நிம்மதி ஏற்படும். சிலருக்கு பூர்வீகச் சொத்து ஒன்று கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
பலன் தரும் பரிகாரம்
சனிக்கிழமை தோறும் ஆலையில் வீட்டின் பூஜை அறையில் 5 எள் எண்ணெய் தீபம் ஏற்றி வரவும்.
நன்மை தரும் நாட்கள்
ஆவணி – 1,2,7-9,14-16,21-23
சந்திராஷ்டம நாட்கள்
ஆவணி 4 பிற்பகல் முதல் 6 இரவு வரை